இந்தி ஒரு வரலாற்றுச்சுருக்கம் - கார்த்திக் புகழேந்தி
இந்தி என்றவுடன் நமக்கு மொழி எதிா்ப்பு என்ற ஒன்றுமட்டுமே நமது பிரஞ்கையில் உதயமாகும். அதன் மூலம் மற்றும் பின்னணி குறித்த காரணத்தை நம்மை அறியச்செய்யும் துாண்டல் பணியினை இந்நுால் நிச்சயமாக செய்கின்றது.
பொதுதளத்தில் அனைவரும் இந்தி பற்றியும், அதன் தோற்றம் மற்றும் மொழி உருவான விதம் குறித்தும் அறியவும், இந்தித் திணிப்பின் பின்புலம், அதன் காரணம், மொழிப்பாகுபாடு, மொழிப்போராட்டப்பின்னணி, மொழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மொழிப்போர் தியாகிகள் சிலர் குறித்த பதிவு என இக்குறுநுாலில் இவ்வளவு நீண்ட கால வரலாற்றின் தகவல்களை செறிவாக கவனப்படுத்திய பாங்கு இங்கு பாராட்டுக்குரியது.
ஒரே நாடு ஒரே மொழி என்ற சொல்லாட்சிக்கு பின் நிகழ்ந்த நிகழக்கூடிய பதற்றம் நுாலினை வாசித்த பொழுது நம்முள் தொற்றிக்கொள்கிறது. நுாலிலிருந்து “இந்தியைப் புகுத்துவது என்பது அரசியல் உணர்ச்சியால் அல்ல கலாச்சார உணர்ச்சியால். இந்தியை நாம் வன்மையாக எதிர்ப்பதும் அதே கலாசார உணர்ச்சியால்தான்” என்றார் பெரியார். இன்று அரசியல் உணர்ச்சியும் அதில் மேலோங்கியிருக்கிறது.
பல மொழிகளை கொன்று குவித்து இன்று இம்மொழி தம்மை உயர்வாக காண்பித்துக்கொள்ள முயலுகின்றது. இன்னும் முயன்று கொண்டுதான் இருக்கின்றது. இத்தகைய அரசியல் சூழலில் நமக்கு நாம் பேசக்கூடிய மொழி குறித்த அக்கரையும் விழிப்புணர்வும் அவசியமாகின்றது. அதற்கு இத்தகைய நுாலினை வாசித்தல் அவசியமாகும்.
மற்றொரு மேற்கோள் நுாலிலிருந்து ஹிட்லரின் படைகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டபோது அடிமைப்படுத்தபட்ட பிரதேசங்களில் ஜெர்மன் மொழி கட்டாயமாக்கப்பட்டது. ஒரே ஆட்சி ஒரே கலாசாரம் ஒரே மொழி என்பது பாசிசத்தின் முக்கியக் கொள்கை.
மாநில அரசின் செயல்பாட்டிற்கு நிதி தேவையின் போது ஒன்றிய அரசானது துவக்கத்திலிருந்தே மொழிக்காக ஒதுக்கும் நிதியில் தமிழுக்கு அநீதி செய்துள்ளமையை சான்றுடன் இந்நுாலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மேலும் நீதிக்கட்சி தொடங்கி சமகால கழக ஆட்சியாளர்கள் வரை தமிழ்மொழிக்கு அலுவலகம் தொடங்கி கல்விநிலையங்கள் வரை அதற்கான அங்கீகாரம் பெற்றுத்தந்த வரலாற்றையும் குறிப்புகளாக காணமுடிகின்றது.
இந்நுால் மொழி குறித்தான அக்கறையை வாசிக்கின்ற பொழுது ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
🌳🌳🌳

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக