செவ்வாய், 16 செப்டம்பர், 2025

ARTICLE 15 சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் - சா.திருவாசகம்

 

    Article 15 என்ற இந்தி திரைப்படம் குறித்த தனது பார்வையை எழுதி நூலாக வெளிக்கொண்டு வந்துள்ளார் தோழர் சா. திருவாசகம்.

    ஒரு திரைப்படத்தைக் காணும் பொழுது அது ஏற்படுத்தும் தாக்கம் என்பது ஒரு வகையான அனுபவம் என்றால் அதே திரைப்படம் குறித்த நூலை வாசிப்பது என்பது வேறு வகையான அனுபவம். வாசித்தல் என்பது கற்பனை வெளிக்கான திறப்புகள். அது பல்வேறு விதமான தாக்கங்களை, கோணங்களை நமக்கு தருகின்றது. 

    தோழர் சா.திருவாசகம் இந்த படத்தின் மையக்கருத்தை உள்வாங்கி ஒவ்வொரு காட்சியையும் சமகாலத்தின் சமூக நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்த்து எழுதிச் செல்கிறார். தலித் அரசியல், வர்க்க அரசியல் உள்ளிட்ட கோட்பாட்டு சிந்தனைகளை பொறுத்தமான காட்சிகளில் குறிப்பிட்டு எழுதி காட்சி மொழியை வேறுவிதமான தளத்திற்கு நகர்த்தியுள்ளார்.  

ஏனென்றால் இப்படியான தீவிரத்தன்மை கொண்ட திரைப்படத்தை வெறுமனே பார்த்துவிட்டு கடப்பது என்பதே மிகவும் எளிதான காரியம் இல்லை. படம் பேசும் தீவிரத்தன்மையை உள்வாங்கி மேலும் கூர்மையாக அணுகி எழுதும் போது படம் வேறு வேறு திறப்புகளை நிகழ்த்திச் செல்கிறது.  


குறிப்பாக தலித் சிந்தனையோடு இந்த படத்தை அணுகும் போது மேலும் நுட்பமாக புரிந்து கொள்ள இந்நூல் துணைச் செய்கிறது. காட்சி மொழியில் அனைத்தையும் சாத்தியப்படுத்தி விட முடிவதில்லை. அத்தகைய இடத்தை எழுத்து மொழி பூர்த்தி செய்கிறது. எழுத்தில் கூறமுடியாத சில இடங்களை மிக எளிதாக காட்சிப்படுத்தி விட்டு செல்வதையும் பார்க்க முடிகின்றது . 


எனவே காட்சி மொழியையும் எழுத்து மொழியையும் ஒருசேரவே கவனத்தில் நாம் கொள்ள வேண்டிய தேவை இங்கு உள்ளது. இன்றைக்கு சுதந்திரம் என்பது எல்லா தளங்களிலும் எவ்வாறு தரப்படுகிறது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. உதாரணமாக ஆசிரியர் நூலில் குறிப்பிடுவதைப் போல அட வீட்டில் இருக்கும் எலி தொல்லை தாங்க முடியல என்கிற பிரச்சனைகளை எல்லாம் பேசி படங்கள் எடுக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் ஆர்ட்டிகள்-15 திரைப்படம் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை அறிய நாம் இந்தியச் சமூக சூழலும் சினிமா சூழலும் அறிந்தவராக இருக்க வேண்டும் . 


இந்நூலை வாசித்தபிறகு நான் உணர்ந்தவைகளும், எனக்குள் எழுந்த கேள்விகளும்... 


1.சுயசாதி விமர்சன கண்ணோட்டத்தை கொண்டு இயங்குவது அவசியம்.

2.பாலியல் வல்லுறவுக்கு அதிகமாக பாதிக்கப்படுவது தலிப் பெண்கள் மட்டுமே ஏன்?

3.டெல்லியில் நிர்பயா என்கிற பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை போல தலித் பெண்களுக்கு நேரும் வன்கொடுமைகள் தேசிய அளவில் தலைப்புச் செய்தியாக மாறுவதே இல்லை ஏன்? அல்லது மாநில மாவட்ட செய்தியாக கூட வெளிவர விடாமல் செய்வது எது ?

5.இது "சாதாரண தலித் கேஸ் சார்" என்ற வரி

6.தினக்கூலிப் பணி செய்யும் சிறுமிகள் 25 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக கேட்டதால் அவர்களை கொலை செய்திருக்கும் சம்பவம் சமூகத்தின் மனநிலை தான் என்ன?என்று மனதை உலுக்கும்படியாக ஆசிரியர் கேள்வி கேட்கின்றார்.

7.நவீன தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய காலகட்டத்திலும் தொலைபேசி சாதனங்களின் வழி ஆதாரம் திரட்டும்போது தலித் வன்கொடுமை வழக்குகளில் மட்டும் பாகுபாடும் யாதொரு தகவலும் வெளியாகாமல் பார்த்துக் கொள்வது என்பது எவ்வளவு ஏமாற்றுத்தனம்?

8.அதிகாரம் தனக்கு இசைந்து போகாதவர்களை ஒழித்து கட்டவும் தயங்குவதே இல்லை. சாதி இந்து மருத்துவருக்கே இந்த நிலை என்றால் தலித் மருத்துவரான மாலதியின் கதி என்ன?

9.நீதிக்காக அவர்களிடம் எப்போதும் கையேந்தி நிற்கிறோம். ஆனால், நமக்கான நீதியை பெற போராட்டமே சாத்தியம் என்கிறார்.

10.இந்திய சாதி அமைப்பு குறித்து முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வார்த்தைகள் - சாதி அமைப்பின் இயங்கியல் முறை குறித்து அறிந்து கொள்ள முயற்சித்தால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார்கள்.

11.சாதி, அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடினால் குரல் எழுப்பினால் அவர்கள் தேச விரோதிகளாக மாற்றப்படுவார்கள்.

12.படத்தில் வரும் ஒரு வசனம் "உயரத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் என்றைக்கேனும் ஒரு நாள் கீழே வந்து தான் ஆகணும்" என்ற வரிகள் அவர்களை அவர்களே சுய விமர்சனம் செய்யத் தூண்டுகின்றது.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற இந்த உன்னத நிலையை அனைவரும் உணரவும் அதன் வழி நடக்கவும் நோக்கியே ஆர்ட்டிக்கிள் 15 என்கிற படமும், இந்த நூலும் வலியுறுத்துகிறது.

சமூக அக்கறையில் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்நூலை கட்டாயம் வாசிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றேன்..

  மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி   எழுதிய நூலினைப்படித்தேன். நூற்றுப்பதினொறு பக்க அளவில் அமைந்திருந்தது. அளவில் சிறிய நூல் வடிவம்...