சனி, 3 பிப்ரவரி, 2024

ஆண் மையவாதச் சிந்தனையை சிதறடிக்கும் இமையாளின் - "ஆண்கள் இல்லாத வீடு "

 

ஆண் மையவாதச் சிந்தனையை சிதறடிக்கும் 

இமையாளின் - "ஆண்கள் இல்லாத வீடு 


    மையாள்  என்ற புனைப்பெயரில் கவியுலகில் கவிதை எழுதி வருபவர் நர்மதா குப்புசாமி ஆவார். இவரது “ஆண்கள் இல்லாத வீடு”  என்னும் தலைப்பில் அமைந்த கவிதை நூலினை வாசித்த மட்டில் எனது உணர்வு எழுச்சியை வெளிப்படுத்தவே இப்பதிவினை பதிவிடுகிறேன்.

“ஆண்கள் இல்லாத வீடு” என்ற கவிதை நூலின் அட்டை முகப்பு பக்கத்திலேயே வீட்டின் கதவு ஆனது திறந்தபடி எவ்வித நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகள் இன்றியும் இயல்பான தன்மைகள் அமைந்து விடுவதனை பார்க்க முடிகின்றது. 

பெண்களோடு தான் நம் வாழ்வு அமைந்தாலும் ஏனோ பெண்ணின் மன உணா்வுகளை புாிந்துக் கொள்வதில் ஏதோ குறுக்கீடு நிகழ்ந்த வண்ணமே உள்ளது. அது எதுவாயினும் அதை நமக்கு உணா்த்தவே இத்தகைய பெண் கவியின் படைப்புகளினைத் தொடந்து நாம் வாசிப்பதின் வழியாக மட்டுமே  அதனைப் புாிந்து கொண்டு வாழ்வில் அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க முடியும்.


 

 பெண் என்பவள் நம் வாழ்வில் ஒரு தாவரத்தைப் போல, வெயிலைப் போல, காற்றைப்போல, பிாிக்கமுடியாத ஒரு உயிராக இப்பிரபஞ்சத்தில் வலம் வருகின்றாள். அவளையும் அவளது ஆன்மாவை இரசித்து பாராட்ட தவறிவிட்டோம். பெய்யும் மழையைப் போலவே பெண்ணின் உடலையும், உடல்தாண்டிய மனதையும் எத்தனை எத்தனை ஆண்டுகள் ஒளித்து வைக்கவே பழகி போவாள். ஒருநாளும் ஆண் உணரமுயல்வதில்லை. அன்றாட வாழ்வில் ஆண்களின் தலையீடு இல்லாத ஒரு வாழ்வை தம் கவிதை எனும் ஆயுதத்தால் வாள் வீசி  தம் கனவுகளை மெய்பித்தும், உயிா்பித்தும் அதில் வெற்றியும் கண்டுள்ளாா் கவிஞா்.

“ஓர் ஒற்றையிலை பூமி தொடுகையில்

அதிர்கின்றன வனங்கள்”

என்ற  வாிகளே போதும் கவிதையின் இரசிப்பை, உயிா்ப்பை நமக்கு திரட்சைப்பழ ரசமாக ஒரு குவளையில் வாசிக்கும் நமக்கு (வாசகனுக்கு) பரிசாகத் தந்து விட்டார் என்றே பகர்கின்றேன். வாழ்வானது போதாமைக்கும் இருப்புக்கும் இடையே தான் ஊஞ்சல் ஆடுகின்றது என்றும் கவிதை  இன்பத்தை அள்ளித்தந்த வண்ணமே உள்ளது. அத்தோடு நின்று விடாமல் மறுக்கப்பட்ட முத்தங்களைப் பற்றியும் தீர்ந்து போன முத்தங்கள் பற்றிய  சுயசரிதையை கவிதையாகவும் படைக்க கவிஞர் தவறவில்லை.காலந்தோறும் பெண்ணிற்கான வெளி என்பது மிகுந்த கேள்விக்குள்ளானதாகவே  வந்தமைகின்றது. அதனை அப்படியே கடக்காமல் கவிதையின் பாடுபொருள் கொண்டு அனுமதிக்கப்பட்ட வானம் எனும் தலைப்பின் வழியாக கல்வி, சிந்தனை, இலக்கியம் இவற்றின் முக்கியத்துவமும் பெண்ணிற்கான வெளியின் அவசியமும் கவிதையை வாசித்தால் விளங்கும்.


“என்னை ஆயுதமாக்கி

புரியுமொரு யுத்தத்தில்

களைத்துவிழும் தேகம்

தன்னை எழுதிக் கொள்கிறது

ஒரு கவிதையாய்! ”

என்ற கவிதையில் பெண்ணுடலையே ஆயுதமாக்கி தமது வெற்றியை கவிதையாக்குபவள் பெண். பெண்மையின் உன்னதத்தை அறியவும், ஆண்களின் குறுக்கீட்டால் பெண்களின் உடல் சாா்ந்தும், உள்ளம் சாா்ந்தும் அவா்கள் - இயல்பு தன்மையில் இல்லை என்பதையும் அறிய, அனைவரும்  அவசியம்  வாசிக்க வேண்டிய பனுவல் இது.

🌱🌱🌱


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி   எழுதிய நூலினைப்படித்தேன். நூற்றுப்பதினொறு பக்க அளவில் அமைந்திருந்தது. அளவில் சிறிய நூல் வடிவம்...