மரப்பாச்சி சொன்ன
ரகசியம் - யெஸ்.பாலபாரதி எழுதிய நூலினைப்படித்தேன். நூற்றுப்பதினொறு பக்க அளவில் அமைந்திருந்தது. அளவில்
சிறிய நூல் வடிவம் என்றாலும் கருத்தின் சாரம் மிக முக்கியமானவை. நாம் அனைவரும்
அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வு அடையவும் அனைவருக்குமான
அல்லது அனைத்து வயதினரும் ஒருமுறையாவது அவசியம் படிக்க வேண்டிய நூல் என்றே
கூறுவேன். இதன் கதைக்களம் பாலியல் சார்ந்தது. வயதான முதியவர் அண்டை வீட்டார்
என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் நம்பி அனுப்புகின்றனர்.அவர் சிறுமியிடம் தவறான தொடு
உணர்வை கடைப்பிடிக்கின்றார். மேலும் குழந்தையை மிரட்டி இதை நீ வீட்டில் கூறினால் உன்னைத்தான்
தண்டிப்பார்கள் என்று கூறிவிடுகின்றார். அதன் பிறகு அக்குழந்தையின் நடவடிக்கைகள் மற்றும்
செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றாள். பின்பு பல நாட்களுக்கு பிறகு பெற்றோரிடம்
தெரிவிக்கின்றாள். அதன் பிறகு பெற்றோர்கள் எடுத்த முடிவு ஒருபுறமும், குழந்தையின் மரப்பாச்சி
பொம்மை அந்த முதியவரை தண்டிப்பது குறித்த ஆசிரியரின் புனைவு எழுத்தும் கதைக்கு ஆறுதலைத்
தருகின்றது. ஆனால் உண்மையில் எத்தகைய தண்டனை குற்றவாளிக்குக் கொடுத்தாலும் உடலைத்தாண்டி
மன ரீதியானப் பாதிப்பிலிருந்து குழந்தையானது வெளிவருது இயலாத ஒன்றேயாகும். எனவே தான்
இத்தகைய அநீதிதிலிருந்து குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ள இத்தகைய கதைச் சொல்லாடல்கள்
மிக அவசியாக வந்தமைகின்றது. மேலும் எல்லா நேரங்களிலும் எல்லோரும் நம்முடன் பயணிப்பதில்லை.
எனவே நம்மை நாமே தற்காத்துக்கொள்ள தயாராக வேண்டும் என்பதையும் கதையில் பேசப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறார்களுக்கு ஏற்படும் தொல்லையும்,
அதனை எவ்வாறு அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றும், மன ரீதியாக அவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி அதிலேயே அல்லது அதன் நினைவினால்
அவர்கள் வாழ்நாள் முழுவதுமாக எதிர்கொள்ளும் மனப்போராட்டம் பற்றியும் நம்மை விரிவாக
சிந்திக்க வைக்கின்றது இந்நூல். அதே போன்று பெற்றோர்களும் தமது
குழந்தைகளிடம் பாலியல் சார்ந்த அடிப்படையான விழிப்புணர்வை அவர்களுக்கு வழங்க
வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் பேசுகிறது. தொடுதலில் வித்தியாசங்கள் மற்றும் பிற
விழிப்புணர்வையும் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே பெற்றோர்கள் கற்றுத்தர முன்
வரவேண்டும்.
சமகாலத்திற்கு இது மிகுந்த தேவையான விவாதப் பொருளாக கதைக்களம் அமைந்துள்ளது.
பாலியல் சார்ந்த குற்றங்கள் நாளுக்குநாள் அதிகாரித்துக்கொண்டே வரும் இத்தகைய சூழலில்
நாம் அவற்றைப் பற்றி மனம் திறந்து உரையாடவும், அதுப்பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள்
முதலில் இல்லத்திலும், கல்வியில் இது போன்ற சிறார் இலக்கியங்களைப் பெற்றோர்கள்
முதலில் படித்தும், பின்பு குழந்தைகளுக்கு படிக்கவும் பரிந்துரை செய்வதன் மூலமாகவே
இத்தகைய பாலியல் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள உதவும்.
மரப்பாச்சி என்பது வெறும் பொம்மையாக மட்டுமே
நமக்குத் தோன்றினாலும், குழந்தைகளுக்கு அவர்கள் உளச்சிக்கலில் உள்ள தருணங்களில் கூடுதலாக
தமது மனதின் குரலாக, தமது எண்ணங்களை வெளிப்படுத்த அல்லது காதுகொடுத்து கேட்கவும் இந்த
மரப்பாச்சி பொம்மையே அவர்களுக்கு உதவுகிறது. பெற்றோர்கள் கண்டிப்புடன் இருப்பது ஒருபுறம்
தேவை என்றாலும், அன்றாடம் குழந்தைகளிடம் அன்பொழுகப் பேசி அவர்கள் எண்ணங்களை தயக்கமின்றி
கூறுவதற்கான வெளியை நாம் ஏற்படுத்திக்கொடுக்க தவறவேண்டாம். இதனால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை
மறைக்காமல் பெற்றோரிடம் உடனே தெரிவித்து விடுவார்கள் என்பதையே கதை உணர்த்துகிறது.
கூடுதலாக
சில குறிப்புகளையும் காண்பித்துச் செல்வது
கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக மரப்பாச்சி பொம்மையானது ஆண்,பெண் என இருபாலரின் உடை, உடல் வேறுபாட்டைப் பற்றி அறிய
இவை பயன்படுத்தப்பட்டுள்ளது. நுண் இயங்குத் திறன் (ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ் – fine
motor skills) விரல்களைக் கொண்டு சிறிய பொருட்களைப் பிடித்து வேலை செய்யும் திறன் குறித்தும்,
சட்டைப் பட்டன் போடுவது, பென்சில் பிடித்து எழுதுவது, கோட்டுக்குள் எழுதுவது என இவற்றிற்கெல்லாம்
மணலில் விரல்களால் விளையாடுவது, விரல்களால் எடை தூக்குவது போன்ற பயிற்சிகள் உதவும்
என்கிறார்.
பாதுகாப்பான
தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (safe Touch – Unsafe Touch) பற்றி அறிதல் மிக அவசியமான
ஒன்றாகும். அதில் தாய் தந்தையர் தவிர்த்து மற்றவர்கள் உடலின் அந்தரங்கமான பகுதியை தொடுதல்
மற்றும் கூசும்படியாகவோ, வலி ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டால் உடனடியாகச் சத்தம் போட
வேண்டும். அல்லது பெற்றோரிடம் உடனே தெரிவிக்குமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்தல் செய்திருக்க
வேண்டும். கூடுதலாக 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் பேசலாம் என்பதையும் நூலின் வழியாக அறிய முடிந்தது. சிறார்
இலக்கிய வரிசையில் மிகவும் கவனப்படுத்தப் பட வேண்டிய நூல் என்றால் அதுமிகையாகாது. எனவே
அனைவரும் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக